வீடியோ காலில் பேச வைத்து இளம்பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டல்
அழகு நிலையத்துக்கு பயிற்சிக்காக வந்த இளம் பெண்ணை வீடியோ காலில் பேச வைத்து ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், பல்லடம் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பயிற்சிக்கு சென்றார். அந்த அழகு நிலையத்தில் பல்லடத்தை சேர்ந்த பிரபு (வயது 27), மற்றும் அதே பகுதியை சேர்ந்த பானு (32) ஆகியோரும் பயிற்சிக்கு வந்தனர். அப்போது அவர்கள், 3 பேருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அவ்வப்போது 28 வயது பெண், பிரபுவுக்கு கடன் கொடுத்து வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தான் கொடுத்த பணத்தை அந்தப் பெண், பிரபுவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர், பணம் கொடுக்க வேண்டுமென்றால் தன்னுடன் நேரம் செலவிடுமாறும், ஆபாசமாக வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண்ணும் பிரபுவிடம் வீடியோ காலில் பேசி உள்ளார்.
அப்போது அந்த வீடியோவை பிரபு புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களை பானுவிற்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பானுவும், பிரபுவும் சேர்ந்து அந்த புகைப்படத்தை, 28 வயது பெண்ணிடம் காட்டினர். ேமலும், கடனை திருப்பிக்கேட்டால், ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன அந்தப் பெண், இதுபற்றி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானு, பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.