பனை மரங்களை வெட்ட தடை

நாட்டில் உள்ள 10 கோடி பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.;

Update:2025-09-26 03:55 IST

தமிழர்களின் வாழ்வோடும், வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து இருந்த பனை மரத்தை 1988-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி மாநில மரமாக தமிழக அரசு பிரகடனப்படுத்தியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர், “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்” என்றார். அதாவது தக்க சமயத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் தினை போன்று சிறியதாக இருந்தாலும், அந்த உதவியினால் பயன் பெற்றவர் அதனை பனை போன்று பெரிதாக கருதுவார்கள். சேர மன்னர்கள் எதிரிகளோடு போரில் வெற்றி பெற்று வாகை சூடும் நேரத்தில் பனைப் பூவைத்தான் சூடியுள்ளனர். அவர்களின் அரச முத்திரையிலும் வில் யானையுடன், பனை மரத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் ஏன் திருக்குறள் கூட பனை ஓலை சுவடிகளில்தான் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் பல கோவில்களில் தல விருட்சமாக பனை மரமே உள்ளது. வேர் முதல் உச்சி வரை அனைத்து பாகங்களும் பயன் தரும் என்றால் அது பனை மரம் ஒன்றுதான். பண்டையகால மன்னர்கள் பனை மர வளர்ப்பிலும், பனை மரத்தை வெட்டக்கூடாது என்பதிலும் அதிக முனைப்போடு இருந்தனர். காஞ்சிபுரம் அருகில் உள்ள திருப்பனங்காடு கிருபாநாதேஸ்வரர் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில், ‘உயிருள்ள பனை மரங்களை வெட்டக்கூடாது’ என்ற உத்தரவு செதுக்கப்பட்டுள்ளது. அதுபோல சீர்காழியில் உள்ள சோழர் கால கல்வெட்டில், ‘பயிரிட பயன்படாத நிலங்களில் பனை மரங்களை நடவு செய்யவேண்டும்’ என்ற ஆணையும் இருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கணக்குப்படி, நாட்டில் உள்ள 10 கோடி பனை மரங்களில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆயுளை கொண்டது பனை மரம். இத்தகைய பனை மரங்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாக குறைந்து வருவதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதை வெட்டுவதை தடுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழுவும், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தலைமையில் வட்டார கண்காணிப்பு குழுவும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலான குழு ஆய்வு மேற்கொண்டு எத்தனை பனை மரங்கள் இருக்கின்றன? என்பதை கிராம நிர்வாக அலுவலர் துணையோடு கணக்கிட்டு பயிர்சாகுபடி பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

மேலும் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பனை மரத்தை வெட்டியே தீரவேண்டும் என்ற நிலை வந்தால் அதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் இருந்துதான் பெறவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆக கலெக்டர் அனுமதியில்லாமல் ஒரு பனை மரத்தைக்கூட வெட்ட முடியாது. ஒருவேளை அனுமதி கிடைத்தாலும் ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அரசின் இந்த உத்தரவு நிச்சயமாக பனை மரங்கள் முறையற்று வெட்டப்படுவதை தடுத்து பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதற்கிடையே 6 கோடி பனைமர விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசின் முயற்சி பாராட்டுக்குரியது ஆகும். கடைநிலை ஊழியர்களும் பனை மரம் குறித்து பதிவு செய்து, அதனை முறையாக பராமரிக்கவேண்டும். பனை மரங்களை காப்பாற்றுவதோடு, அவற்றில் இருந்து கிடைக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு உரிய உதவிகளை செய்யவேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்