டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: நாசகார கும்பலின் சதி செயல்கள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.;

Update:2025-11-12 03:14 IST

      தலைநகர் டெல்லியிலும், அதன் பக்கத்தில் இருக்கும் அரியானா, காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கின்றன. இவையெல்லாம் தனித் தனி சம்பவங்கள் அல்ல. சங்கிலி தொடர்போல ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று புலன் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது பெரிய நாசகார கும்பலின் சதி வலைதான் என்பதை அறியும்போது நாட்டின் பாதுகாப்புக்கு சவாலாகவே தெரிகிறது. நேற்று முன்தினம் திங்கட்கிழமையன்று மாலை 6.52 மணிக்கு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ-20 கார் வந்து நின்றது. மெதுவாக வந்து நின்ற அந்த கார் அடுத்த சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அதன் பக்கத்தில் இருந்த வாகனங்களும் பற்றி எரிந்தன.

எனவே அந்த பகுதி அக்னியை கக்கும் எரிமலையாக காணப்பட்டது. தீப்பிழம்போடு கார்கள் வெடித்து சிதறியதில், அந்த பகுதியில் 25 மீட்டர் சுற்றளவுக்கு மனித உடல்களின் பாகங்களும், காரின் பாகங்களும் சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது, அந்த காரை முகத்தில் கருப்பு நிற முகக்கவசம் அணிந்தவாறு ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்தது பதிவாகியிருந்தது. இந்த கொடூர சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அந்த கார் குர்கானை சேர்ந்த சல்மான் என்பவர் பெயரில் வாங்கப்பட்டு, சில பேரின் கைகள் மாறி புல்வாமாவை சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி ஸ்ரீநகரில் பல இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

இதன் தொடர்ச்சியாக காஷ்மீரை சேர்ந்த டாக்டர்கள் சிலருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஸ்ரீநகரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் பின்னணியில் புல்வாமாவை சேர்ந்த 35 வயதுள்ள முசாமில் ஷகீல் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத்தொடர்ந்து, மேலும் சில டாக்டர்கள் குறிப்பாக பெண் டாக்டரான ஷாகீன் ஷாகித் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வெறும் கைது மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 20 டைமர்கள் என்று பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வடமாநிலங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை தொடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு விபத்துக்கு காரணமானவர்களுடன், வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதானவர்களுக்கும் இருந்த தொடர்புகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து சிதறிய காரின் உரிமையாளரான தாரிக்கிடம் இருந்து அந்த காரை, புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபி வாங்கியது மட்டுமல்லாமல், அந்த காரை அவர்தான் தொடர்ந்து பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. டாக்டர் உமருக்கும், 2,900 கிலோ வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று கூறப்படுவதை பார்த்தால் ஒரு பெரிய நாசகார செயல் தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவின் போலீஸ் படையும், உளவுத்துறையும், தேசிய புலனாய்வு முகமையும் மக்களின் பாதுகாப்பில் கடிகார முள் போல எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்