பரபரப்பான பீகார் தேர்தல்

100 வயதை கடந்த 14 ஆயிரம் பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றப்போகிறார்கள்.;

Update:2025-10-08 05:30 IST

பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6,11-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. பதிவாகும் ஓட்டுகள் 14-ந்தேதி எண்ணப்படுகிறது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. 7 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆளப்போவது யார்? என்று தீர்மானிக்கப்போகிறார்கள். இப்போது 18 வயது பூர்த்தியான அதாவது 18 வயது முதல் 19 வயது வரையுள்ள 14 லட்சத்து ஆயிரம் பேர் புதிதாக முதல் முறையாக வாக்களிக்கப்போகிறார்கள். 100 வயதை கடந்த 14 ஆயிரம் பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றப்போகிறார்கள்.

முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 107 தொகுதிகளிலும், பா.ஜனதா 105 தொகுதிகளிலும் போட்டியிடும். மீதம் உள்ள 31 தொகுதிகள் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை பகிர்ந்துகொள்ளும். நிதிஷ்குமார் இதுவரை 9 முறை முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் எடுத்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக 5 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 9 முறை முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதன் காரணம் ஒருமுறை தன் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல் ராஜினாமா செய்தார். சில நேரம் ராஜினாமா செய்துவிட்டு கூட்டணி கட்சிகளை மாற்றிவிட்டு மீண்டும் உடனடியாக முதல்-மந்திரி பதவியை ஏற்று இருக்கிறார்.

2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தொகுதி எண்ணிக்கையில் 15 தொகுதிகள் வித்தியாசம் இருந்தாலும், ஓட்டு சதவீதத்தை எடுத்துக்கொண்டால் தேசிய ஜனநாயக கூட்டணி 37.3 சதவீதமும், மகா கூட்டணி 37.2 சதவீதமும் பெற்றிருந்தது. ஆக ஓட்டு சதவீதத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. 2 அணிகளுக்கும் சாதக, பாதகம் இருக்கிறது. நிதிஷ்குமாரை பொறுத்தமட்டில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்-மந்திரியாக இருப்பதால் மக்கள் அவர் ஆண்டதுபோதும் என்று சலிப்படைந்து மாற்றத்தை விரும்பினால், அந்த கூட்டணிக்கு பாதகமாக அமையும்.

75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பதும், வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்திருப்பதும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்துள்ள திட்டங்களும் வலுசேர்த்தாலும், பீகார் வாக்காளர்களில் 14.3 சதவீதம் பேர் யாதவ் சமுதாயத்தையும், 17.7 சதவீதம் பேர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியாதவ் அந்த 32 சதவீத வாக்காளர்களிடம் பிரபலமாக இருப்பதால் இது மகா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 2 கூட்டணியிலும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கப்பட இருக்கிறது. ஜெயிக்கப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந்தேதி தெரிந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்