புதியதோர் உலகம் செய்வோம்

ரஷியா-உக்ரைன் போரும் முடிவுக்கு வந்தால் உலகமே மகிழ்ச்சியில் துள்ளும்.;

Update:2025-10-15 06:34 IST

“புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என்ற பாரதிதாசனின் கவிதைப்படி போரில்லாத உலகம் இருந்தால்தான் நாடுகளுக்கு இடையே அமைதியும், அன்பும் தழைக்கும். ஆனால் ரஷியா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள் உலக மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகள். இதில் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சி செய்துக்கொண்டிருந்தனர். ஹமாசுக்கும், இஸ்ரேலுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து போர் தொடுத்தது. இதில் இஸ்ரேலில் உள்ள 1,200 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 251 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் கடத்திக்கொண்டு காசாவுக்கு திரும்பியது. இதற்கு இஸ்ரேல் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

இந்த தாக்குதலில் காசாவை சேர்ந்த 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வீடுகள், ஆஸ்பத்திரிகள், கடைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என எல்லாமே தரைமட்டமாகின. எங்கு பார்த்தாலும் இடிபாடுகள்தான் காட்சியளித்தன. காசாவுக்குள் எந்த நாட்டில் இருந்தும் அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்ல இஸ்ரேல் தடைவிதித்ததால் மக்கள் கடும் பட்டினியால் வாடினர். இந்த போரை நிறுத்தவேண்டும் என்று இந்தியா உள்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. அமெரிக்காவும் போரை நிறுத்தவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் அனைவரும் பாராட்டத்தக்க அளவில் போர் நிறுத்த முயற்சியை எடுத்தார். இதற்காக அண்மையில் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதில், இரு தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 72 மணி நேரத்துக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கவேண்டும். இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து படிப்படியாக வெளியேறவேண்டும். காசாவை இஸ்ரேல் இணைத்துக்கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஒருசில அம்சங்களைத்தவிர மற்றவற்றை செயல்படுத்த ஹமாசும் ஒப்புக்கொண்டது. இதனைத்தொடர்ந்து எகிப்து நாட்டில் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பின்னர் எகிப்து நாட்டில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைதி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் அனைவராலும் கையெழுத்திடப்பட்டது. உடனடியாக ஹமாசும், இஸ்ரேலும் போரை நிறுத்திவிட்டு பணயக்கைதிகளை விடுதலை செய்யத்தொடங்கிவிட்டனர்.

அதோடு சில ஆண்டுகளாக நடந்த குண்டுவெடிப்பு சத்தமும், அழுகுரலும் இப்போது அங்கு இல்லை. இரு நாடுகளிலும் மக்கள் மகிழ்ச்சியால் ஆனந்த நடனமாடுகிறார்கள். போருக்கு முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப் அனைவருடைய பாராட்டுக்கும் உரியவராக இருக்கிறார். அடுத்து உருக்குலைந்து இருக்கும் காசாவுக்கு மறுவாழ்வு கொடுக்க அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும். அந்த நாட்டு மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் தொடங்கவும், அந்த நாட்டு பொருளாதாரம் மீண்டும் உயிர்பெற்று எழவும் அனைவரும் உதவிக்கரம் நீட்டவேண்டும். இந்த போர் நிறுத்தம் ஒரு முடிந்த கதையாகிவிடவேண்டும். இதேபோல ரஷியா-உக்ரைன் போரும் முடிவுக்கு வந்தால் உலகமே மகிழ்ச்சியில் துள்ளும். அந்த நாளை எதிர்பார்த்துதான் அகிலமே காத்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்