62 ஆண்டு பயணத்தை முடித்த மிக்-21 போர் விமானம்

கிழக்கு பாகிஸ்தான் கவர்னர் மாளிகை மீது மிக்-21 விமானம் குண்டு வீசியதன் விளைவாகவே வங்காளதேசம் என்ற நாடு உருவானது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2025-10-03 04:58 IST

இந்திய ராணுவத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த மிக்-21 ரக ஜெட் விமானங்களை இனி வானில் பார்க்க முடியாது. விமானப்படையில் எங்கு பார்த்தாலும் மிக்-21 ரக விமானங்களே என்று சொல்லும் வகையில் கடந்த 62 ஆண்டுகளாக நீண்ட நெடிய பயணத்தில் இருந்த மிக்-21 விமானம் சமீபத்தில் நிரந்தரமாக ஓய்வு பெற்று விட்டது.

1980-90-ம் ஆண்டுகளில் விமானப்படையில் இருந்த மொத்த போர் விமானங்களில் 60 சதவீதம் “போர் குதிரைகள்’’ என்று அழைக்கப்பட்ட இந்த மிக்-21 விமானங்கள்தான் இருந்தன. நமது நாட்டில் மொத்தம் 874 மிக்-21 ரக விமானங்கள் சேவை செய்துள்ளன. 1962-ம் ஆண்டு இந்தியா- சீனா போருக்கு பிறகு இந்திய விமானப்படையை வலுப்படுத்த ரஷியாவிடம் இருந்து இந்த ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டது.

இந்த விமானத்தை ஓட்டும் பயிற்சியை பெறுவதற்காக இப்போது 89 வயதாகும் பிராஜேஷ் தார் ஜயல் மற்றும் 7 இளம் விமானப்படை அதிகாரிகள் குழு ரஷியாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த குழுவினர் அதுவரை ‘சூப்பர்சானிக்’ விமானத்தை ஓட்டி பழகாததால் மிக்-21-ஐ பார்த்தவுடன் மலைத்து போனார்கள். அதோடு விமானத்தை இயக்கும் காக்பிட் முழுவதும் ரஷிய மொழியில் எழுதப்பட்டு இருந்ததோடு, அளவீடுகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘அங்குலம்-அடி’ என்பதற்கு பதிலாக ‘மீட்டர்-கிலோமீட்டர்’ அடிப்படையில் இருந்தது. இந்த கஷ்டங்களைத் தாண்டி அவர்கள் முழுமையாக பயிற்சி பெற்று நாடு திரும்பினர். முதலில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

அதன்பின்பு மராட்டிய மாநிலம் நாசிக்கில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அங்கு ரஷியாவில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு இங்கேயே இந்திய விமானங்களாக உருவாக்கப்பட்டன. முதன் முதலில் மிக்-21 விமானம் 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்பட்டது. 1971-ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் கவர்னர் மாளிகை மீது மிக்-21 விமானம் குண்டு வீசியதன் விளைவாகவே வங்காளதேசம் என்ற நாடு உருவானது என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து 1999-ல் கார்கில் போர், 2019-ல் பாலகோட் துல்லிய தாக்குதலில் மிக்-21 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 2019-ல் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் மிக்-21 விமானத்துடன் சென்று எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போது மிக்-21 ரக விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார்.

இந்திய விமான படையில் பல சாகசங்களை மிக்-21 விமானம் செய்து இருந்தாலும், 400-க்கும் மேற்பட்ட விமானிகள் விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். அதனால் இந்த விமானத்தை ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றும், ‘விதவைகளை உருவாக்கும் விமானம்’ என்றும் அழைத்தனர். இந்த மிக்-21 ரகத்தின் முதல் விமானத்தில் சண்டிகாரில் இருந்து அப்போதைய விங் கமாண்டர் தில்பாக் சிங் முதலில் பறந்தார். இப்போது அதன் கடைசி பயணத்தையும், சண்டிகாரில் இப்போதைய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் ஓட்டி நிறைவு செய்தார். சண்டிகாரில் தொடங்கிய மிக்-21 ரக விமானத்தின் பயணம் சண்டிகாரிலேயே முடிந்தது. அது தனது பயணத்தை முடித்தாலும், என்றும் நினைவில் நிற்கும்.

Tags:    

மேலும் செய்திகள்