கொடிக்கம்பத்துக்கு ரூ.1,000 கட்டணம்
ஆங்காங்கே தற்காலிகமாக வைக்கப்படும் கொடிகளை நிகழ்ச்சி முடிந்தப்பிறகும்கூட அவிழ்ப்பதில்லை.;
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்வதற்கு முன்பே தங்களுக்கென்று கொடியை வடிவமைத்துவிடுகிறார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் கார்களில் கொடியை மாட்டுவதோடு மட்டுமல்லாமல், ஆங்காங்கு கொடிக்கம்பங்களையும் நட்டு கட்சி கொடிகளை பறக்கவிடுகிறார்கள். கட்சி தலைவர்களின் பிறந்த நாளின்போதும் போட்டி போட்டுக்கொண்டு சாலைகளில் பீடங்களை அமைத்து கொடிக்கம்பங்களை நாட்டுகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
நிரந்தர கொடிக்கம்பங்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடந்தாலோ, கட்சி தலைவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தாலோ அவரை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறமும் தாறுமாறாக கம்பங்களை நட்டு கொடியை பறக்க விடுகிறார்கள். சிலநேரம் ஆர்வக்கோளாறால் அந்த பகுதியில் இருக்கும் மாற்று கொள்கைகளைக் கொண்ட தலைவர்களின் சிலையை சுற்றி உள்ள தடுப்புகளில் கூட கொடிகளை பறக்கவிட்டு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல்களும் ஏற்படுகின்றன. மதுரை மாவட்டம் விளாங்குடி மற்றும் பழங்காநத்தத்தில் கட்சி கொடி வைக்க அனுமதி கேட்டு அ.தி.மு.க. மற்றும் வி.சி.க. தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, பொதுஇடங்களில் இருக்கும் அனைத்து நிரந்தர பீடங்களைக்கொண்ட கொடிக்கம்பங்களையும் அகற்ற உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டு அமர்விலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு சரிதான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலை இருக்கிறது. இந்த சூழலில் நிரந்தர கொடிக்கம்பங்கள் மட்டுமல்லாமல் ஆங்காங்கே தற்காலிகமாக வைக்கப்படும் கொடிகளை நிகழ்ச்சி முடிந்தப்பிறகும்கூட அவிழ்ப்பதில்லை.
இதனாலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இதற்கிடையில் சாலையில் கொடிக்கம்பங்களை நடுவது தொடர்பான அந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக கொடிகள் அமைக்க 3 நாட்கள் மட்டுமே அரசு அனுமதி வழங்கும். சாலைக்கு நடுவில் உள்ள தடுப்பில், பாலங்கள், வடிகால் ஓரங்கள், நடைபாதையில் கொடி கட்ட அனுமதி கிடையாது.
சாலையில் இருந்து கிழக்கு பகுதியில் 3 மீட்டர் தள்ளித்தான் கொடி கட்ட அனுமதி வழங்கப்படும். இந்த கொடிக்கம்பங்களும் 3.5 மீட்டர் உயரத்தில்தான் அதிகபட்சமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. இதை விசாரித்துக்கொண்டு இருந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இதுபோல தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் கட்டணம் வசூலிக்கலாம். இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறினார்.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த வழிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தவேண்டும். அமல்படுத்தாத அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். நீதிபதி இளந்திரையன் கூறிய ஆலோசனையும், உத்தரவும் வரவேற்புக்குரியது. சாலைகளில் கட்சி கொடிக்கம்பங்கள் புற்றீசல் போல நடப்படுவதையும் முறைபடுத்த இது உதவும். தேர்தல் நெருங்கும் வேளையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலைகளில் கட்சி கொடிக்கம்பங்கள் நடுவதையும் இது உறுதி செய்யும். அதேசமயத்தில் அரசுக்கு குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை செய்யும்.