டிரம்ப் கார்டு
சீனாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் பயிறுகளை வாங்கவும் ஒப்புக்கொண்டது.;
சீட்டு விளையாட்டை பொறுத்தமட்டில் டிரம்ப் கார்டு அதாவது துருப்பு சீட்டுதான் மிகவும் முக்கியமானதாகும். இக்கட்டான கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை தேடி தருவது இந்த டிரம்ப் கார்டுதான். அதேசமயத்தில் டிரம்ப் கார்டு, கை நிறைய இருந்தாலும் பயனில்லை. அப்படி ஒரு டிரம்ப் கார்டைத்தான் இப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனாவுடனும், இந்தியாவுடனும் பயன்படுத்தி வருகிறார். இந்தியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு விதித்த வரியைத்தான் அவர், டிரம்ப் கார்டாக கையாண்டு வருகிறார். அந்த வரியை சொல்லியே அதை செய், இதை செய் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
இந்தியாவுக்கு முதலில் 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மேலும் 25 சதவீத வரியை சேர்த்து 50 சதவீதமாக அதிகரித்தார். இதே விளையாட்டை சீனாவுடனும் விளையாடி பார்த்தார். ஆனால் சீனா சற்றும் அசரவில்லை. எனவே அமெரிக்கா, சீன பொருட்களுக்கு 57 சதவீத வரியை விதித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. பலம்வாய்ந்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இருக்கிறது. சமீபத்தில் ஆசிய சுற்றுப்பயணத்தை சூறாவளி சுற்றுப்பயணமாக மேற்கொண்டு சில நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்துவிட்டு, தென் கொரிய நாட்டில் புசான் நகரில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் இதில் பங்கேற்றார். மாநாட்டின் இடையே டிரம்ப்பும், ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வரையிலும் நீடித்தது. இந்த சந்திப்பை வெற்றிகரமான சந்திப்பு என்று வர்ணித்த டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 57 சதவீத வரியை 47 சதவீதமாக குறைத்துவிட்டார். இந்தியாவைவிட அதிகமாக அதாவது இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் மீது 50 சதவீதமும், சீனா மீது 57 சதவீதமும் வரி விதித்திருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இந்தியாவை விட குறைவான வரியை சீனா மீது அமெரிக்கா விதித்துள்ளது.
அதேநேரத்தில் சீனா பல பொருட்களின் உற்பத்திக்கு முக்கிய தேவையாக விளங்கும் அரிய கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தி, சீனாவில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் பயிறுகளை வாங்கவும் ஒப்புக்கொண்டது. இதுமட்டுமல்லாமல் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக பெண்டானில் போதை மருந்து கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா உறுதி அளித்தது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இந்த 2 பெரும் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு டிரம்ப் 10-க்கு 12 என்று மதிப்பெண் கொடுத்துள்ளார். ஆக முழு மதிப்பெண்ணுக்கும் அதிகமாக கொடுத்து சூப்பர் சந்திப்பாக மதிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பினால் இந்தியாவுக்கும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான தடையை சீனா தளர்த்தியதால் இந்தியாவுக்கும் பலன் கிடைக்கும். சீனாவுடன் வர்த்தக நேசக்கரம் நீட்டியுள்ள டிரம்ப், இந்தியாவுடனும் தன் டிரம்ப் கார்டை பயன்படுத்தி நேசக்கரம் நீட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.