இந்தியாவுக்கு இன்னொரு விமானம் தாங்கி கப்பல்

1,600 வீரர்கள், வீராங்கனைகள் இருக்கும் இந்த கப்பலில் 30 விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு திறன் வாய்ந்தது.;

Update:2025-10-23 04:03 IST

இந்தியாவின் பாதுகாப்பில் முப்படைகளும் வலுவாக இருந்தாலும், சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படையும், கடற்படையும் ஆற்றிய வீர தீர செயல்கள் போற்றுதலுக்குரியது. விமானப்படை விமானங்கள் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் கண்டறிந்து துல்லியமாக தாக்குதலை நடத்தியது. அதேநேரத்தில் அரபிக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பணியவைத்தது. வீரத்தின் சின்னமான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இரவில் தங்கியிருந்து பிரதமர் நரேந்திர மோடி கடற்படை வீரர்களோடு தீபாவளி கொண்டாடினார்.

விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலுக்கு பிரதமர் வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதேபெயரில் இருந்த பழைய விக்ராந்த் கப்பலுக்கு 1969-ல் பிரதமர் இந்திராகாந்தி சென்று ‘கடலில் ஒரு நாள்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு நாள் முழுவதும் தங்கி விமானங்கள் நடத்திய சாகசங்களை பார்வையிட்டார். 1977-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி கடற்படை தினம் ‘கடலில் ஒரு நாள்’ என்ற தலைப்பில் மும்பையில் கொண்டாடப்பட்டது. பிரதமர் மொரார்ஜி தேசாயும் அதில் கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியும், தினத்தந்தி செய்தியாளரும் அழைக்கப்பட்டு இருந்தனர். கடலில் சென்றுகொண்டு இருந்த விக்ராந்த் கப்பலுக்கு மற்றொரு கப்பலில் இருந்து பிரதமர் மொரார்ஜி தேசாய் கயிறு கட்டி நாற்காலியில் அமரவைத்து கொண்டுவரப்பட்டார்.

அப்போது தினத்தந்தி செய்தியாளர் அவரிடம், உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேட்டபோது ‘ஐயம் நாட் ஸ்கேர்டு’ அதாவது ‘நான் பயப்படவில்லை’ என்று பதில் அளித்தார். பின்பு பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் அனைவரும் கப்பலில் இருந்து விமானங்கள் சீறிபாய்ந்து செய்து காட்டிய சாகச நிகழ்ச்சிகளையும் பார்த்தனர். தற்சமயம் அந்த கப்பல் இல்லை. அது 1997-ல் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக இப்போது அதேபெயரில் உள்ள விக்ராந்த் கப்பல் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டு 2022 முதல் சேவையை தொடங்கியுள்ளது. ‘மிதக்கும் நகரம்’ என்று அழைக்கப்படும் இந்த கப்பலின் நீளம் 262 மீட்டர். 1,600 வீரர்கள், வீராங்கனைகள் இருக்கும் இந்த கப்பலில் 30 விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு திறன் வாய்ந்தது.

விக்ராந்த் என்ற சமஸ்கிருத பெயருக்கு ‘’வீரமிக்கவன்’’ என்று பொருள். இந்த கப்பலின் குறிக்கோள் வாசகம், ‘என்னை எதிர்த்து போராட தைரியமுள்ளவனை நான் வெல்வேன்’ என்பதாகும். பிரதமர் நரேந்திர மோடி மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விக்ராந்த் கப்பலில் இரவில் தங்கி தீபாவளியை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், காலையில் கப்பல் தளத்தில் யோகாசனம் செய்து வீரர்களிடம் உரையாற்றி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஐ.என்.எஸ். விக்ராந்த் இந்தியாவின் பெருமை என்று பெருமிதத்துடன் கூறினார்.

12 போர்க்கப்பல்களின் அணிவகுப்பையும், தளத்தில் இருந்து விமானங்கள் சீறி பாய்ந்ததையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். விமானம் தாங்கி கப்பல்களின் எண்ணிக்கையில் இந்தியா எவருக்கும் சளைத்ததல்ல. இந்தியாவிடம் விக்ரமாதித்யா, விக்ராந்த் என்ற 2 விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்றன. அணுசக்தி மூலம் இயங்கும் மற்றொரு கப்பலை கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதை கட்டிவிட்டால் அமெரிக்காவுக்கு அடுத்தாற்போல, சீனாவுக்கு இணையாக இந்தியாவிடமும் 3 விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்