பெட்ரோல்-டீசல் விலை உயருமா?
உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.;
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே அந்த விலை அடிப்படையில்தான் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தநிலையில், 2022-ம் ஆண்டு ரஷியா-உக்ரைன் போர் தொடங்கப்பட்ட நேரத்தில் பல நாடுகள் அமெரிக்காவுக்கு பயந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன. ஆனால் இந்தியா தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருந்ததால் சலுகை விலையில் ரஷியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை இன்றுவரை விற்பனை செய்து வருகிறது. உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. நாம் ஆண்டுக்கு 243.2 மில்லியன் டன் (சுமார் 24 ஆயிரம் கோடி லிட்டர்) கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம்.
இதில் ரஷியாவிடம் இருந்து மட்டும் கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 130 கோடிக்கு இறக்குமதி செய்துள்ளோம். ஆனால் 2020-21-ல் இது வெறும் ரூ.7 ஆயிரத்து 1 கோடி என்ற அளவில்தான் இருந்தது. அதாவது 4 ஆண்டுகளில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி 24 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறுகிறது. ஏனெனில் அந்த பணத்தை வைத்துதான் உக்ரைன் போரை ரஷியா நடத்துகிறது என்று டிரம்ப் குற்றம் சுமத்தி வருகிறார். எனவே அவர் இதற்காக இந்தியா மீது கூடுதலாக அபராத வரியும் விதித்தார். அதோடு நிற்காமல் இன்னும் கூடுதலாக வரி விதிப்பேன் என்று பயங்காட்டி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் இந்தியா மசியவில்லை.
மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல், “எங்கள் தலையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு எந்த விவகாரம் குறித்தும் பேசமுடியாது” என்று அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பதிலடி கொடுத்தார். இந்தநிலையில், டிரம்ப் ரஷியாவில் உள்ள கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ராஸ்நெப்ட் மற்றும் லுக்ஆயில் நிறுவனங்களுக்கு கடுமையான தடைகளை விதித்துள்ளார். இந்த தடை என்னவென்றால், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கி வைக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்கும்போது டாலர் மூலம் பரிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களோடு நிதி பரிமாற்றங்கள் வைத்துக்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க கருவூலத்துறையும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள ரஷிய நிறுவனங்களிடம் இருந்துதான் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது இந்த அறிவிப்பு வந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் நமது பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் ரஷிய நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்த ஆவணங்களை மறுபரிசீலனை செய்துவருவதாகவும் அரசாங்கத்தின் ஆணைக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளது. ஒருவேளை ரஷிய நிறுவனங்களிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் இந்தியா கூடுதல் விலை கொடுத்து மற்ற நாடுகளில் இருந்து வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இருக்குமா? என்பது போக, போக தான் தெரியும்.