வந்தே பாரத் சரக்கு ரெயில் தமிழ்நாட்டை தொடுமா?
வந்தே பாரத் சரக்கு ரெயில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லக்கூடியது.;
மக்களுடைய இயல்பு வாழ்க்கை இப்போது பரபரப்பு மிகுந்ததாக மாறிவிட்டது. எங்கே செல்லவேண்டும் என்றாலும், வசதியான, விரைவான பயணத்தையே பெரும்பாலானோர் அதிகம் விரும்புகிறார்கள். விமானப் பயணம் என்பது விரைவான பயணம் என்றாலும்கூட, கட்டணம் அதிகம் என்பதால், அதை வசதி படைத்தவர்களால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ரெயில் பயணமே சாலச் சிறந்தது.
ஆரம்பத்தில் தொலைதூர பயணத்துக்கு பயணிகள் ரெயில்களே இயக்கப்பட்டன. பிறகு, கால சூழ்நிலைக்கும், பயணிகளின் எண்ண ஓட்டத்திற்கும் ஏற்ப எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது, முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்ட தேஜஸ், வந்தே பாரத் ரெயில்கள் வந்துவிட்டன. முதல் வந்தே பாரத் ரெயில், வாரணாசி-டெல்லி இடையே 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி இயக்கப்பட்டது. இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
தெற்கு ரெயில்வே பிராந்தியத்தில், முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை-மைசூரு இடையே கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி விடப்பட்டது. தற்சமயம் தமிழ்நாட்டில், சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவை, விஜயவாடா, மைசூரு ஆகிய நகரங்களுக்கும், கோவை, மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் இந்த குளுகுளு ரெயிலுக்கான கட்டணத்தைப்பார்த்து தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்குமா? என்ற சந்தேகம்கூட எழுந்தது. ஆனால், இன்றைக்கு எல்லா வந்தே பாரத் ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டு போவதே அதற்கு சாட்சி. சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை தற்போது 8-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், 2 வந்தே பாரத் ரெயில்கள் விரைவில் தமிழ்நாட்டுக்கு வர இருக்கின்றன.
நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லா வந்தே பாரத் ரெயில்களுமே சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவைதான். இப்போது தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கூட உருவாக்கப்பட்டு விட்டது. அந்த ரெயில் சென்னையை மையப்படுத்தி இயக்கவேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பயணிகளைத் தாண்டி, இப்போது சரக்குகளை ஏற்றிச் செல்லவும் வந்தே பாரத் சரக்கு ரெயில் தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. 16 பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் சரக்கு ரெயிலும் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லக்கூடியது.
இதனால் பருவ காலத்திற்கு ஏற்ப ஒரு மாநிலத்தில் அதிகம் விளையும் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்கு கொண்டுசெல்ல முடியும். அதாவது, வடமாநிலங்களில் விளையும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறியை தேவையுள்ள மாநிலங்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்தில் கொண்டுசெல்ல முடியும். இதனால், அங்கு விலைவாசி குறைவதுடன் பொருளாதாரமும் தழைக்கும். தற்போது, தமிழகத்தில் பூண்டு, வெங்காயம் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில், அவை அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து வந்தே பாரத் சரக்கு ரெயில் மூலம் மின்னல் வேகத்தில் தமிழகத்திற்கு கொண்டு வந்தால், இங்கே விலைவாசியை குறைக்க முடியும். எனவே, வந்தே பாரத் சரக்கு ரெயிலை தமிழ்நாட்டை நோக்கியே இயக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.