நீலகிரி: அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது.;

Update:2025-05-25 10:43 IST

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி உள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.

மேலும், தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக ரத்தனகிரி-தாபோலுக்கு இடையே கரையை கடந்தது. இதுதவிர மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரணங்களினால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் இந்த நேரத்திலும், அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாலும் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்