சீனாவில் மற்றொரு தலைமை ராணுவ அதிகாரி கைது; அதிபர் ஜின்பிங் அதிரடி
ஜாங் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு உயரதிகாரியான ஜெனரல் லியு ஜென்லி என்பவரையும் ஜின்பிங் அரசு கைது செய்துள்ளது.;
ஹாங்காங்,
சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உயர்ந்த நிலையில் சீனா உள்ள சூழலில், அதன் மக்கள் விடுதலை ராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன்படி, சீனாவின் உயரிய ராணுவ தலைவரான ஜெனரல் ஜாங் யூக்சியா என்பவர் கடந்த 24-ந்தேதி கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் தீவிர விசுவாசம் கொண்ட அதிகாரி என பெயர் பெற்றவரான ஜாங் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்? என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு உயரதிகாரியான ஜெனரல் லியு ஜென்லி என்பவரையும் ஜின்பிங் அரசு கைது செய்துள்ளது என இன்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜின்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையத்தில் ஜாங் உயர்ந்த பதவியை வகித்தவர். லியு, அந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர் ஆவார். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர், மத்திய ராணுவ ஆணையத்தில் ஜின்பிங் மற்றும் ஜெனரல் ஜாங் ஷெங்மின் என இருவர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.
சமீப ஆண்டுகளாக சீன ராணுவத்தில் முக்கிய நபர்களை ஜின்பிங் அதிரடியாக நீக்கி வருகிறார். 2022-ல் 6 உறுப்பினர்களை கொண்டிருந்த அந்த ஆணையத்தின் எண்ணிக்கை, பின்னர் 4 ஆக குறைந்தது. தற்போது, ஜின்பிங் தலைமையின் கீழ் ஒரேயொரு அதிகாரி உள்ளார்.
அதனால், அந்த ஆணையம் தொடர்ந்து செயல்படுவது அல்லது கலைக்கப்படுவது என்பது ஜின்பிங்கின் வசமே உள்ளது. அனைத்து உறுப்பினர்களையும் ஜின்பிங் கவனித்து தேர்வு செய்த நிலையில், உறுப்பினர்கள் நீக்கம் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.