வங்காளதேசம்: இந்து வாலிபர் உயிருடன் எரிந்து பலியான கொடூரம்; கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.;
டாக்கா,
வங்காளதேசத்தின் நர்சிங்டி நகரில் சஞ்சால் பவுமிக் (வயது 25) என்ற இந்து வாலிபர் ஒருவர் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் இரவில் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியதில் சிக்கி உயிருடன் எரிந்து பலியானார்.
இதுபற்றி நர்சிங்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அப்துல்லா அல் பரூக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடையில் தீப்பிடித்து எரிந்தபோது நபர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி, சுற்றி வந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. மின் கசிவா? அல்லது அந்நியர்கள் யாரேனும் தீ வைத்து விட்டனரா? என விசாரித்து வருகிறோம் என்றார்.
கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்க முயன்றனர். எனினும், அவர் உடல் கருகி பலியாகி விட்டார். யாரும் இதுவரை (இன்று) கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், இது திட்டமிட்ட சதி என்றும் அவரை படுகொலை செய்து உள்ளனர் என்றும் பவுமிக்கின் குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், கடந்த டிசம்பர் மத்தியில் இருந்து பரவி வரும் வன்முறை, கும்பல் தாக்குதல் சம்பவங்களால் பல்வேறு பகுதிகளிலும் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என இந்துக்கள் குறி வைத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.