கனடாவில் மற்றொரு சம்பவம்; இந்திய வம்சாவளி இளைஞர் பொது வெளியில் படுகொலை
கனடாவில் அபோட்ஸ்போர்டு பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் தர்சன் சிங் சாஹ்சி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.;
டொரண்டோ,
கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், கனடாவின் பர்னாபி நகரில் பொது வெளியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தில்ராஜ் சிங் கில் (வயது 28) என்ற இளைஞர் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். வான்கோவர் பகுதியை சேர்ந்தவரான கில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் நடந்து வரும் கும்பல் தாக்குதலின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் பற்றி அறிந்து ராயல் கனடா போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றபோது தில்ராஜ் படுகாயங்களுடன் போராடியபடி இருந்திருக்கிறார். உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
சம்பவ பகுதியருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபோன்ற வன்முறையின்போது, வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி செல்வது என்பது ஒரு பொதுவான யுக்தியாக செய்யப்பட்டு வருகிறது என போலீசார் குறிப்பிட்டனர்.
சமீபத்தில் அபோட்ஸ்போர்டு பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்சன் சிங் சாஹ்சி என்ற தொழிலதிபர் சுட்டு கொல்லப்பட்டார். அதனுடன், இந்த படுகொலைக்கு தொடர்பிருக்கும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.