சீனா: ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்

ஜனாதிபதியின் உரையை, தூதரக அதிகாரி வாசித்தபோது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என முழக்கங்கள் எழுந்தன.;

Update:2026-01-26 14:52 IST

ஷாங்காய்,

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் வர்த்தக தலைநகர் என அறியப்படும் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதன்படி, தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் தலைமையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில், சீனாவில் உள்ள இந்தியாவின் வம்சாவளியை சேர்ந்த 400 நண்பர்கள், சீன சமூக மக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரக அதிகாரிகள் 20 பேர் உள்பட பலர் பங்கு பெற்றனர்.

அப்போது, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டு, ஜனாதிபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை, தூதரக அதிகாரி வாசித்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என முழக்கங்களை எழுப்பினர்.

இதன்பின்னர் திரண்டிருந்த கூட்டத்தினரின் முன் உரையாற்றிய தூதரக அதிகாரி பிரதீக், ஷாங்காய் நகரில் இருந்து இந்திய நகரங்களுக்கு தினசரி இயக்கப்படும் விமான சேவைகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் உள்ள புதிய வசதிகளை குறிப்பிட்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்