முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர மறுக்கும் ரஷியா

அபுதாபியில் ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.;

Update:2026-01-25 08:09 IST

அபுதாபி,

உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் (ஜன.23) நடைபெற்றது. இதில் ரஷியா, உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது பிராந்திய பிரச்சினைகளை தீர்க்காமல் நீண்ட கால தீர்வை எட்டமுடியாது. எனவே முழுமையாக கைப்பற்றப்படாத பகுதிகளில் நிறுத்தியுள்ள படைகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என ரஷிய தரப்பு வலியுறுத்தியது. இதன்மூலம் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப ஒப்படைக்க முடியாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. இதனால் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் நீடிக்கிறது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் தலைநகர் கீவ், காா்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ரஷியா சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக முடிவடைந்ததாகவும், அடுத்த வாரம் மேலும் பல சாத்தியமான சூழல்கள் இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையாளர்கள் பிப்ரவரி 1-ம் தேதி அடுத்த சுற்றுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவார்கள் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்