வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

அமெரிக்க ராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.;

Update:2026-01-06 10:34 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும், வெனிசுலா கச்சா எண்ணெய் வளங்களை பாதுகாக்க  ராணுவம் களத்தில் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் தேதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் மதுரோ ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே வெனிசுலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்தநிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார். ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார்.

யார் இந்த டெல்சி ரோட்ரிக்ஸ்?

டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றி உள்ளார். அவர் நிதி மற்றும் எண்ணெய் மந்திரியாகவும் உள்ளார். துணை அதிபர் பொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் மந்திரியாக இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.

1969 மே 18 அன்று வெனிசுலா காரகாஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை.

Tags:    

மேலும் செய்திகள்