வெனிசுலா முன்னாள் அதிபர் கைது: ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவது சட்டவிரோதம் - ஐ.நா கண்டனம்

வெனிசுவேலா அல்லது அந்நாட்டு மக்களுக்கு எதிராக எந்தப் போரும் இல்லை என்று அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார்.;

Update:2026-01-06 12:16 IST

நியூயார்க்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர். சனிக்கிழமை இரவு புரூக்ளினில் உள்ள போதைப்பொருள் தடுப்பு முகமை சிறையில் மனைவியுடன் மதுரோ அடைக்கப்பட்டார்.தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடத்த கொலம்பியா கோரிக்கை வைத்தது.இதனைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சீனா, கொலம்பியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் உரையை துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகாப்லோ வாசித்தார்.

வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா கண்டனம் தெரிவிக்கிறது. நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளை மதிக்க வேண்டும். நாட்டில் நிலைத்தன்மை மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்தும், அதனால் பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கு இது முன்னுதாரணமாக அமையக் கூடும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் பேசியதாவது:

அமெரிக்க நீதித்துறையால் குற்றம்சட்டப்பட்ட இரண்டு தேடப்படும் குற்றவாளிகளான மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தால் எடுக்கப்பட்ட துல்லியமான சட்ட அமலாக்க நடவடிக்கை ஆகும். வெனிசுவேலா அல்லது அந்நாட்டு மக்களுக்கு எதிராக எந்தப் போரும் இல்லை. நாங்கள் அந்நாட்டைக் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்