இந்தியாவுக்கான புதிய தூதரை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.;

Update:2025-08-23 17:23 IST

வாஷிங்டன்,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதரை டொனால்டு டிரம்ப் அறித்துள்ளார். தனது நெருங்கிய ஆதரவாளரான செர்ஜியோ கொர்வை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அறிவித்துள்ளார்.

செர்ஜியோ கொர் தெற்கு மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதராகவும் செயல்படுவார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் நம்பிக்கைக்குரிய நபராக திகழும் செர்ஜியோ கொர் தற்போது வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு பணியாற்றும் ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். செர்ஜியோவை இந்தியாவுக்கான தூதராக நியமிக்கும் ஜனாதிபதி டிரம்ப்பின் பரிந்துரைக்கு நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளித்ததும் செர்ஜியோ இந்தியா தூதராக செயல்படுவார்.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் தஷ்கெட்டில் 1986ம் ஆண்டு செர்ஜியோ பிறந்தார். பின்னர், அங்கிருந்து அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் செர்ஜியோவின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதராக செயல்படுவதால் பாகிஸ்தான், வங்காளதேசத்திற்கான விவகாரங்களிலும் செர்ஜியோ முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்