பாகிஸ்தான்-அமெரிக்கா பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய ஆவலாக உள்ளோம் - மார்க்கோ ரூபியோ

பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாகிஸ்தான் பொருட்களுக்கு 19 சதவீத வரி விதிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.;

Update:2025-08-14 16:41 IST

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராய ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் பாகிஸ்தான் கொண்டுள்ள ஈடுபாட்டை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஊக்குவிக்கும் வகையில், கனிமங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும், துடிப்பான வணிக கூட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் ஆவலாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், பல்வேறு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பாகிஸ்தான் பொருட்களுக்கு 19 சதவீத வரி விதிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், கடந்த வாரம் இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து இந்த வாரம், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா இடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் தலீபான் உள்ளிட்ட முன்னணி ஆயுதக்குழுவினரை எதிர்த்துப் போராடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்