இந்தோனேசியா: வெள்ளத்திற்கு 700 பேர் பலியான நிலையில் மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது.;
பாலி,
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தும், காணாமல் போயும் உள்ளனர். வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே புயல், வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலியாகி, நிவாரண பொருட்கள் கிடைக்க முடியாமல் திணறி வரும் சூழலில், நிலநடுக்க பாதிப்பும் அவர்களை துயரில் தள்ளியுள்ளது.
27 கோடி பேருக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த நவம்பர் 26-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 4.4 அளலிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த அக்டோபரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் சூறாவளி புயலானது, அந்நாட்டை கடுமையாக பாதித்து உள்ளது.