அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் திட்டத்தை திடீரென கைவிட்ட இந்தியர்கள்..! வெளியான அதிர்ச்சி காரணம்
இந்தியர்கள் தங்கள் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு பதறியடித்தபடியே விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.;
நியூயார்க்,
அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சத்துக்கு உயர்த்தி வெளியிட்ட டிரம்பின் உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சொந்த நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் தற்போது எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த உத்தரவு எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் தெளிவு இல்லை. குறிப்பாக, தங்கள் நாட்டுக்கு சென்று திரும்பும்போது அமெரிக்காவில் அனுமதிக்கப்படுவார்களா? என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. இதனால் தங்கள் நிலைமை என்னாகுமோ? என்ற பரபரப்பு அவர்கள் மத்தியில் தொற்றி இருக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் இந்தியர்கள் விடுமுறைக்காக நாடு திரும்பும் திட்டங்களை ரத்து செய்துள்ளனர். குறிப்பாக வருகிற தீபாவளி மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக பெற்றிருந்த விடுமுறையை ரத்து செய்து வருகிறார்கள். தனது சொந்த திருமணத்துக்காக பெற்றிருந்த விடுமுறையையே ஒருவர் ரத்து செய்ததாக சக பணியாளர் ஒருவர் கூறினார்.
மறுபுறம் அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக விமானங்களுக்காக நேற்று முன்தினம் காத்திருந்தனர். அப்போது டிரம்பின் இந்த உத்தரவு வெளியானது. உடனடியாக தங்கள் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு பதறியடித்தபடியே விமான நிலையத்தை விட்டு வெளியேறினர். இது அந்த பகுதிகளில் பரபரப்பையும், அதேநேரம் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.