உலக தலைவர்களில் முதன்முறையாக... பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.;

Update:2025-12-17 01:47 IST

அடிஸ் அபாபா,

பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன.

நம்முடைய இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, பன்முக தன்மையில் ஒற்றுமைக்கான அடையாளங்களாக, மொழிவளம் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட இரு நாடுகளும் உள்ளன. அமைதி மற்றும் மனித இன நலனுக்கான செயல்பாட்டில் ஈடுபடும் ஜனநாயக சக்திகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்நாட்டின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. பிரதமருக்கு, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருது வழங்கி கவுரவித்து உள்ளார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.

இந்தியர்கள் அனைவரின் சார்பாக, இதனை பணிவுடன் நான் ஏற்று கொள்கிறேன் என பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார். உலகின் மிக தொன்மையான மற்றும் செழிப்பான நாகரிகம் கொண்ட நாட்டின் இந்த விருது வழங்கப்பட்டது மிக சிறந்த பெருமைக்குரிய விசயம் என குறிப்பிட்டார். இதற்கான அங்கீகாரம், இருதரப்பு நல்லுறவை வடிவமைக்க மற்றும் வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களையே சேரும். இதனை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்