பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு
140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்து உள்ளன.;
பாரீஸ்,
இஸ்ரேல்-காசா போரில் இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே காசாவுக்கு உணவு கொண்டு செல்லப்படும் வழிகளை இஸ்ரேல் அடைத்தது. இதனால் உணவுக்காக தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கின்றனர். இது பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காசா போரை நிறுத்துவதற்கு அதனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தி வந்தார்.
அதன்படி ஐ.நா. சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது என அவர் கூறினார். ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்து உள்ளன. ஆனால் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய சக்தியாக பிரான்ஸ் உள்ளது. பிரான்சின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.