பிரான்ஸ் அதிபரை அமெரிக்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது;

Update:2025-09-24 07:17 IST

நியூயார்க், 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவில் குவிந்தனர். இதனால் நியூயார்க் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன் தினம் மாலை சென்றார். அப்போது, நியூயார்க் நகரில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால், ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக வாகனத்தில் இருந்து வெளியேறிய மேக்ரான், சாலையோரத்தில் காத்திருந்தார். அவரை அவ்வாறு காக்க வைத்ததற்காக அருகில் இருந்த காவல் துறை அதிகாரி மன்னிப்பு கோரினார். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது.இதுகுறித்து நியூயார்க் காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

‘நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபர் செல்லும்போதெல்லாம், அந்தத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதுதான் திங்கள்கிழமை நடைபெற்றது. அதேவேளையில், தனது வாகனம் நிறுத்தப்பட்டது தொடர்பாக டிரம்பை கைப்பேசியில் தொடர்புகொண்டு மேக்ரான் சிரித்தபடியே கூறினார். அவர்களின் பேச்சு நட்பார்ந்த முறையில் இருந்தது’ என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்