இந்தியாவும், இஸ்ரேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை கொண்டுள்ளன: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பிரதமர் மோடியின் அன்பான வாழ்த்துகளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்தேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.;
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஜெருசலேம் சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் முதலீட்டை முன்னெடுத்து செல்வது, புதிய கண்டுபிடிப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி அந்நாட்டு பொருளாதார மற்றும் தொழில் துறை மந்திரி நீர் பர்கத்துடனான சந்திப்பின்போது ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்ட மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தேன். பிரதமர் மோடியின் அன்பான வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன்.
தொழில் நுட்பம், பொருளாதாரம், திறன்கள் மற்றும் திறமை, இணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்த அவருடைய பார்வைகளை மதிப்பிட்டேன். நமது நல்லுறவு இன்னும் பலப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று, ஆஸ்திரேலியாவில் போண்டி பீச்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்து கொண்டார். ஆழ்ந்த இரங்கலையும் வெளிப்படுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை, இந்தியாவும், இஸ்ரேலும் பகிர்ந்து கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.