'இந்தியா-மாலத்தீவு இடையே உறுதியான பிணைப்பு உள்ளது' - முகமது முய்சு

மாலத்தீவுக்கு இந்திய அரசு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக முகமது முய்சு கூறினார்.;

Update:2025-07-26 15:52 IST

Image Courtesy : @MMuizzu

மாலி,

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இன்று நடைபெற்ற மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதனிடையே, மாலத்தீவுக்கு இந்தியா ரூ.4,850 கோடி கடன் வழங்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்யும் என்றும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 'இந்தியா-மாலத்தீவு இடையே உறுதியான பிணைப்பு உள்ளது' என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி நேற்று நடைபெற்ற அரசு விருந்தின்போது, மாலத்தீவுக்கு இந்திய அரசு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உறுதியான நட்புக்கு நன்றி தெரிவிப்பதாக முகமது முய்சு கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"மாலத்தீவு மற்றும் இந்தியா இடையேயான நீண்டகால உறவுகளுக்கு இந்தியப் பெருங்கடல் ஒரு உயிருள்ள சான்றாகும். இரு நாடுகளும் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உடைக்க முடியாத உறுதியான பிணைப்பு உள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாலத்தீவு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்த லட்சியங்களை நனவாக்குவதில் இந்தியாவின் கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது."

இவ்வாறு முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்