இந்தியா-ஓமன் இடையே விரிவான பொருளாதார நல்லுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது
ஓமனில் வசிக்கும் 6.75 லட்சம் இந்திய சமூகத்தினரின் நலனை உறுதி செய்ததற்காக அந்நாட்டுக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.;
மஸ்கட்,
பிரதமர் மோடி ஓமனில் அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை இன்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்பின்னர், இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார நல்லுறவுக்கான ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ.) இன்று ஏற்படுத்தப்பட்டது. இதற்காக இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்டு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.
இதன்படி, வர்த்தக தடைக்கான விசயங்களை குறைப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு வரவுகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு கணிக்க கூடிய கட்டமைப்பை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் இரு தரப்பு பொருளாதாரத்திலும் பெரிய அளவில் தனியார் துறையினரை ஊக்குவிப்பது ஆகியவையும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வர்த்தகம், எரிசக்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள்-மக்களுடனான உறவு போன்றவற்றில் வலுவான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய கூட்டு அறிக்கை ஒன்றையும் இரு நாடுகளும் வெளியிட்டன.
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் இருதரப்பும் கண்டனம் தெரிவித்து கொண்டது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அப்போது தலைவர்கள் கோடிட்டு காட்டினர்.
இந்த சந்திப்பின்போது, ஓமனில் வசிக்கும் 6.75 லட்சம் இந்திய சமூகத்தினரின் நலனை உறுதி செய்ததற்காக அந்நாட்டுக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தினர் பெரும் பங்காற்றியுள்ளனர் என ஓமன் அரசும் பதிலுக்கு நன்றி தெரிவித்து கொண்டது. இதுதவிர, கடல்சார் ஒத்துழைப்புக்கும் இரு நாடுகளும் கூட்டாக ஒப்புதல் அளித்தன.