புதின் வருகையின்போது கையெழுத்தாகும் இந்தியா-ரஷியா அணுசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியா-ரஷியா மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.;
புதுடெல்லி,
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, நீண்ட காலமாக இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.
அதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியா-ரஷியா மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. மேலும், சிவில் அணுசக்தியில் இந்தியாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) கையெழுத்திடுவதற்கு ரஷிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி புதின் வருகையின்போது இந்தியா-ரஷியா அணுசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷியாவின் ரோசாட்டம் அணுசக்தி நிறுவனம் பல்வேறு உலைகளை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.