காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்; 64 பேர் பலி
ஹமாஸ் குழுவை அழிக்கும் நோக்கில் காசா முனையில் போர் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்த வார தொடக்கத்தில் கூறினார்.;
டெய்ர் அல்-பலா,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும், ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எனினும், இவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்றோ அல்லது வீரர்கள் என்றோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 20 ஆயிரம் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர் என சான்றுகள் எதனையும் வெளியிடாமல் இஸ்ரேல் கூறுகிறது.
நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
இந்நிலையில், காசா முனையின் டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாக்குதல் நடந்தது. காசா முனை பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 64 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 48 பேரின் உடல்கள் இந்தோனேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மற்ற 16 பேரின் உடல்கள் நாசர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்த வார தொடக்கத்தில் கூறும்போது, காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் குழுவை அழிக்கும் நோக்கில் காசா முனையில் இஸ்ரேலின் போர் தீவிரப்படுத்தப்படும் என கூறினார். இந்த சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நெதன்யாகு கூறியதன்படி, இந்த நடவடிக்கை (தாக்குதல்) இன்று தொடங்கப்பட்டு உள்ளதா? என்ற விவரம் தெளிவாக தெரிய வரவில்லை.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் கத்தாரில் மந்திரி குழுவினர் இன்று ஒன்று கூடியுள்ளனர் என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அதில் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.