விண்வெளியை நோக்கி பயணம்: "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழங்கிய சுபான்ஷு சுக்லா

சுமார் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி மையத்தை விண்வெளி வீரர்கள் அடைய உள்ளனர்.;

Update:2025-06-25 13:20 IST

நியூயார்க்,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை 2027-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம் ஆகும்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

6 முறை ஒத்தி வைப்பு

இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஜூன் 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பம், வானிலை காரணமாக 6 முறை அது ஒத்திவைக்கப்பட்டது.

கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர் என்றும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், இன்று வானிலை 90 சதவீதம் சாதகமான நிலையில் உள்ளதால் விண்வெளி பயணம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி விண்வெளி பயண தொடக்கமாக விண்வெளி வீரர்கள் அனைவரும் விண்கலத்தில் அமர்ந்தனர். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் விண்கலத்தில் அமர்ந்தார். இதுபற்றிய புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்த நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அது 28 மணிநேரத்தில் விண்வெளி நிலையம் சென்றடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன்படி, நாளை மாலை 4.30 மணிக்கு விண்கலம் சென்றடைகிறது.

 "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.."

இந்நிலையில் விண்வெளிப் பயணம் துவக்கத்தின்போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கி, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "என் அன்பான நாட்டு மக்களே! என்ன ஒரு பயணம்.. 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம்.. வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்று சொல்கிறது. என்னுடைய இந்தப் பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு தொடக்கமல்ல, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கமாகும். இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நெஞ்சும் பெருமையால் பெருமிதம் கொள்ள வேண்டும்... ஒன்றாக, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத் " என்று கூறினார்.

ஆராய்ச்சிகள்

தொடர்ந்து பயணித்து வரும் ராக்கெட்டில் இருந்து வளிமண்டலத்திற்கு அப்பால் சென்றதும் டிராகன் விண்கலம் பிரிந்து விடும். இதன்பின்னர், விண்வெளியை அடைந்ததும், பூமியை சுற்றி வரும். வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இதில், 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். விண்வெளியில், இந்திய விண்வெளி வீரர் சுக்லா 2 வாரம் தங்கியிருக்கிறார். அவர், 7 வித ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறார். விண்வெளியில் பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி பற்றிய ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளார்.

இது நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் நான்காவது தனியார் விண்வெளி வீரர்கள் பயணமாகும். மேலும், ஆக்சியம்-4 (Ax-4) பயணம் இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்கனவே ஏழு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் இன்று (புதன்கிழமை) புறப்பட்டனர். இந்த பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் குடும்ப உறுப்பினர்கள்

41 ஆண்டுகளுக்குப் பிறகு.. சுபான்ஷு சுக்லா

கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷியாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்