கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
வங்காளதேசத்தில் நாளை பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 80. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் ஆவார். அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
கலீதா ஜியாவின் மறைவைத் தொடர்ந்து, வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாளை ஒரு நாள் பொது விடுமுறை விடப்படும் என்றும் அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார். கலீதா ஜியாவின் உடலுக்கு நாளை இறுதி சடங்குகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.