டீன்-ஏஜ் சிறுமியை கடத்தி, கும்பல் பலாத்காரம்; அறையை உடைத்து... வைரலான மீட்பு வீடியோ
இங்கிலாந்து நகரங்களில் வெள்ளையின சிறுமிகளை திட்டமிட்டு நட்பு கொண்டு, கடத்தி, கும்பல் பலாத்காரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.;
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், 16 வயதுடைய சீக்கிய சிறுமியை அந்த கும்பலை சேர்ந்த 30 வயதுடைய நபர் நட்பாக பேசி தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். இதன்பின்னர், கடந்த 14-ந்தேதி சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அறையில் சிறுமியை அடைத்து பலாத்காரம் செய்துள்ளார். அந்நபருடன் வேறு 6 நபர்களும் அறையில் இருந்துள்ளனர். இதில் சிறுமி கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
சீக்கிய சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பற்றி அறிந்த சீக்கிய அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்தம் போட்டு அந்த நபரை வெளியே வரும்படி கூறினர். எனினும், பதில் எதுவும் வராத நிலையில், ஒலிபெருக்கியில் கூப்பிட்டனர். இந்த சூழலில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் போலீசாரின் உதவியுடன் அறையின் கதவை தட்டினர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், அந்த டீன்-ஏஜ் சிறுமியை வெளியே மீட்டு கொண்டு வந்தனர். வாலிபரையும் பிடித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீண்டநேர ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் குற்றவாளியை பிடித்து போலீசார் வேனில் ஏற்றினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி சீக்கிய அமைப்பின் தலைவர் ஜஸ்சா சிங், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், அந்த நபரை எதிர்கொள்ளும் காட்சி இடம் பெற்றது. அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லிம் பின்னணியை கொண்டவர் என வீடியோ தெரிவித்தது.
அந்த நபர் இளம் சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்றும் அவர் ஒரு கொடூர மனிதர் என்றும் பக்கத்து வீட்டு பெண் கூறினார். தவிர, அந்த நபரை மற்றொரு 12 வயது சிறுமியுடனும் அந்த பெண் பார்த்துள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் யுக்திகளை பயன்படுத்தி அந்த நபர் செயல்பட்டு இருக்கிறார்.
இதனால், எங்களால் உதவ முடியவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, 200 பேர் கொண்ட சீக்கிய அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமியை மீட்க சென்றுள்ளனர்.
இந்த நபரின் வீட்டை கடந்து ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் தினமும் செல்கின்றனர். அவர்களில் சிலரை இதுபோன்ற விசயங்களுக்கு அந்த கும்பல் பயன்படுத்தி கொள்கிறது என தகவல் தெரிவிக்கின்றது.
இதுபோன்ற கும்பல் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி தேசிய அளவில் விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த ஆண்டு ஜூனில் அறிவிப்பு வெளியிட்டார்.
ரோதர்ஹேம், ரோச்டேல் மற்றும் டெல்போர்டு நகரங்களில் வெள்ளையின சிறுமிகளை திட்டமிட்டு நட்பு கொண்டு, கடத்தி, கும்பல் பலாத்காரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. பத்து ஆண்டுகளாகவே இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் அரசியல் ரீதியிலான சர்ச்சை விவாதங்களும் தொடர்ந்து வருகின்றன.
2025-ம் ஆண்டு தொடக்கத்தில் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கூட, இங்கிலாந்து அரசை கடுமையாக விமர்சித்ததுடன், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை கவனிக்க அரசு தவறி விட்டது என குற்றச்சாட்டு கூறினார். இதுதொடர்பாக முழு அளவில் விசாரணை தேவை என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.