நியூசிலாந்தில் மலையடிவாரத்தில் நிலச்சரிவு; சுற்றுலா முகாம்கள் புதைந்தன - பலர் மாயம்
நியூசிலாந்தின் வடக்கு பகுதி மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.;
வெலிங்டன்,
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதியில் பிரபல சுற்றுலா முகாம் தளம் உள்ளது.இங்கு சுற்றுலா பயணிகள் முகாம்களை அமைத்து தங்குவார்கள். இந்தநிலையில், மலையடிவாரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கூடாரங்கள், ஒரு குளியலறை ஆகியவை மீது பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தது.
இதனால் அந்த முகாம்கள், வாகனங்கள் மண்ணில் அடித்து செல்லப்பட்டு புதைந்தன. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.