போரால் சீரழிந்த உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு... அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின்
காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான அமைதி வாரியத்திற்கு ரஷியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும் என புதின் கூறினார்.;
மாஸ்கோ,
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முயற்சியில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிகளுக்கு, அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளை தருவதற்கு தயார் என புதின் கூறியுள்ளார்.
புதினை, டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று சந்தித்து உக்ரைன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதின் நேற்றிரவு பேசும்போது, காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான டிரம்ப்பின் அமைதி வாரியத்திற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.9,161 கோடி) ரஷியா நன்கொடையாக வழங்கும் என கூறினார். அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டு உள்ள ரஷிய சொத்துகளில் இருந்து அவை வழங்கப்படும்.
இந்த சொத்துகளில் கிடைக்கும் மீத தொகையை கொண்டு, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். இதற்கான சாத்தியங்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் கூறினார்.