போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா-உக்ரைன் விருப்பம்: டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் பேச்சு
ஐ.நா. அமைப்பு, இந்த விசயங்களை எல்லாம் செய்ய வேண்டும். நான் செய்ய கூடாது என டிரம்ப் பேசியுள்ளார்.;
டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சிமாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் பங்கேற்று சிறப்புரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, ரஷியா-உக்ரைன் மோதல், நேட்டோ மற்றும் போரில் அமெரிக்காவின் பங்கு ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார். ஜெலன்ஸ்கிக்கும், புதினுக்கும் இடையே வெறுப்புணர்வு இருந்தபோதும், போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என அப்போது கூறினார்.
அவர் பேசும்போது, நான் 8-க்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தி தீர்வு கண்டுள்ளேன். அதனால், இதுவும் அதுபோன்று எளிதில் நடந்து முடிந்து விடும் என நினைத்தேன். சில போர்களை எல்லாம் ஒரு சில மணிநேரத்தில் நிறுத்தி தீர்வு கண்டேன். ஏனென்றால், அந்தளவுக்கு இதுபோன்ற விவகாரத்தில் நான் நன்றாக செயல்படுபவன் என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.
இந்த விசயங்களை எல்லாம் ஐ.நா. அமைப்பு செய்ய வேண்டும். நான் செய்ய கூடாது. ஆனால் அது ஒரு விசயம் இல்லை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றி இருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.
ரஷியா-உக்ரைன் மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கும், புதினுக்கும் இடையே பெரிய அளவில் வெறுப்புணர்வு உள்ளது. அது நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவாது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் வேண்டும் என ரஷியா விரும்புகிறது என்றே நான் நினைக்கிறேன். உக்ரைனும் கூட அதனையே விரும்புகிறது என நான் நினைக்கிறேன். நாங்கள் கிட்டத்தட்ட அதனை நெருங்கி விட்டோம் என கூறினார்.
சொல்ல போனால், இந்த மோதலுக்கு முதலில் ஐரோப்பிய நாடுகளே பொறுப்பு என நேட்டோவை குறிப்பிட்டு டிரம்ப் கூறினார். ஆனால், அவர்கள் அமெரிக்காவை நடத்தும் முறை சிறப்பாக இல்லை என்று குற்றச்சாட்டாகவும் கூறினார்.
உக்ரைன், நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளை கடந்தும் போர் முடிவுக்கு வராமல் உள்ளது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.