கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு
கிரீன்லாந்து தொடர்பாகவும், கோல்டன் டோம் அமைப்பது தொடர்பாகவும் கூடுதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.;
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறது. சீனா, கனடா, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதித்து வந்த அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு செயல்பட்டார். அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் கடத்தல் பயங்கரவாதி என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு கூறி வந்த டிரம்ப், திடீரென மதுரோவை அமெரிக்க ராணுவம் உதவியுடள் கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார்.
இதன்பின்பு, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை கொள்முதல் செய்து வருகிறார். பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டினார். தொடர்ந்து, கிரீன்லாந்து மீதும் டிரம்ப் குறி வைத்துள்ளார்.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறினார். ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிப்ரவரி 1-ந்தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த வரி விதிப்புகள் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் என கூறினார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று டிரம்ப் பேசும்போது, எல்லோருக்கும் ஏதோவொரு மிக நல்ல விசயம் நடக்க போகிறது. நேட்டோவுக்கு நான் செய்த நல்லவை போன்று வேறு யாரும் நன்மை செய்ததில்லை.
அதனால், நேட்டோ அதிக மகிழ்ச்சி அடைய கூடிய விசயங்களை நாங்கள் செய்ய போகிறோம். அதற்கான பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து வேண்டும். அமெரிக்கா மற்றும் உலக பாதுகாப்புக்காக கூட அது எங்களுக்கு அவசியம். அது மிக முக்கியம் வாய்ந்தது என பேசினார்.
இந்த நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்றும், அதனை பிப்ரவரி 1-ந்தேதி செயல்படுத்த போவது இல்லை என்றும் டிரம்ப் இன்று அறிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் மார்க் ருத்தேவுடன் நடந்த சந்திப்பு ஆக்கப்பூர்வ வகையில் அமைந்திருந்தது. கிரீன்லாந்து தொடர்பாக வருங்கால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக கட்டமைப்பு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். உண்மையில், ஒட்டுமொத்த ஆர்க்டிக் பகுதியையும் அது உள்ளடக்கி இருக்கும். இந்த முடிவு, முழுமை பெற்றால், அமெரிக்கா மற்றும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் அது சிறந்த ஒன்றாக இருக்கும்.
இந்த புரிதலின் அடிப்படையில், பிப்ரவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வர இருந்த வரி விதிக்கும் திட்டங்களை நான் அமல்படுத்த போவது இல்லை என அவர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாகவும், கோல்டன் டோம் அமைப்பது தொடர்பாகவும் கூடுதல் ஆலோசனை கூட்டமும் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில், துணை ஜனாதிபதி வான்ஸ், வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.