விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் - நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடெல்
நேபாளத்தில் ஊரடங்கு தளர்வையடுத்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.;
காட்மாண்டு,
நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அரசு விதித்த தடையால் ெகாந்தளித்த இளம் தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டுவில் குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கான ‘ஜென் சி’ தலைமுறையினர் நாடாளுமன்றத்ைத முற்றுகையிட்டு கடந்த 8-ந்தேதி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், நாடாளு மன்றம், பிரதமர் வீடு, ஜனாதிபதி அலுவலகம், சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். ஜனாதிபதி வீடு, முன்னாள் பிரதமர் வீடு என பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இளம் தலைமுறையினரின் இந்த போராட்டம் மற்றும் வன்முறை தலைநகரை கடந்து நாடு முழுவதும் பரவிய நிலையில், பிரதமர் சர்மா ஒலி கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பொறுப்பை ராணுவம் கையில் எடுத்தது. நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு பிறப்பித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் போராட்டம் மற்றும் வன்முறை ஓய்ந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியது.
எனவே சில இடங்களில் இன்று காலையில் ராணுவம் ஊரடங்கை தளர்த்தியது. இதை பயன்படுத்தி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்களை வாங்கினர். இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. மேலும் சாலைகளில் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தும் காணப்பட்டது.
ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நேரத்தில் எந்தவித போராட்டம் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை. இதன் மூலம் நாடு முழுவதும் மெல்ல மெல்ல அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நாடு முழுவதும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்துள்ள நிலையில், நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பத்ரகாளியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இடைக்கால அரசின் பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, காட்மாண்டு மேயர் பலேந்திர ஷா, தரன் நகராட்சி மேயர் ஹர்கா சம்பங் மற்றும் நேபாள மின்வாரிய முன்னாள் தலைமை செயல் அதிகாரி குல்மான் கிஷிங் ஆகிய 4 பேரில் ஒருவரை தேர்வு செய்ய போராட்டக்காரர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்தநிலையில், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஜனாதிபதி பவுடெல், அதுவரை அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடினமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும். நம்பிக்கையுடன் இருங்கள் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ராம் சந்திரா பவுடெல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தலைமையகத்தில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை அறிவதற்காக, அந்த கட்டிடத்துக்கு வெளியே ஏராளமான போராட்டக்காரர்கள் தொடர்ந்து காத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.