உலகளாவிய மந்த நிலையிலும்... விரைவான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 8.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.;

Update:2025-12-19 01:48 IST

மஸ்கட்,

பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக முதலில் ஜோர்டானுக்கும், பின்னர் எத்தியோப்பியாவுக்கும் அவர் சென்றார். இரு நாடுகளுக்கான பயணம் முடிந்ததும், ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றடைந்த அவரை அந்நாட்டு துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சையத் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று மேள தாளங்கள் முழங்கியும், இசை கச்சேரி நடத்தியும், சிறுவர் சிறுமிகளின் பாரம்பரிய நடனமும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வந்தே மாதரம் என்றும் பாரத் மாதா கி ஜெய் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.

பிரதமர் மோடி ஓமனில் அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரீக்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்பின்னர், இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார நல்லுறவுக்கான ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ.) இன்று ஏற்படுத்தப்பட்டது. இதற்காக இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்டு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இதன்படி, வர்த்தக தடைக்கான விசயங்களை குறைப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு வரவுகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு கணிக்க கூடிய கட்டமைப்பை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் இரு தரப்பு பொருளாதாரத்திலும் பெரிய அளவில் தனியார் துறையினரை ஊக்குவிப்பது ஆகியவையும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வர்த்தகம், எரிசக்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள்-மக்களுடனான உறவு போன்றவற்றில் வலுவான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய கூட்டு அறிக்கை ஒன்றையும் இரு நாடுகளும் வெளியிட்டன.

பிரதமர் மோடி, மஸ்கட் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, சில நாட்களுக்கு முன்பு பொருளாதார வளர்ச்சி தொடர்பான தகவல் வெளியானது. அதில், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்திற்கு மேல் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகள் சவால்களை சந்தித்தபோதும், இந்தியா தொடர்ந்து விரைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது என கூறினார்.

பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கூட குறைந்த வளர்ச்சி சதவீதத்துடன் திணறி வருகின்றன. இந்தியா தொடர்ந்து அதிக வளர்ச்சி விகிதத்துடன் உள்ளது. அது நாட்டின் திறனை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்தது உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதும், இந்த வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது.

கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 8.2 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவடைந்து இருந்தது. இது, அதற்கு முந்தின காலாண்டில் 7.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்