வங்காளதேசம்: இந்து மத இளைஞர் அடித்துக்கொலை - உடலை நடுரோட்டில் தீ வைத்து எரித்த கும்பல்

சந்திர தாசின் உடலை சாலையோரம் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.;

Update:2025-12-19 16:57 IST

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் ஷெரீப் ஒசாமா பெடி. இவர் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனிடையே, தலைநகர் டாக்காவில் உள்ள சாலையில் ரிக்‌ஷாவில் சென்ற ஒசாமா பெடி மீது பைக்கில் வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒசாமா சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஷெரீப் ஒசாமாவை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பின்னணியில் இந்தியா இருப்பதாக வங்காளதேசதில் உள்ள மத ரீதியிலான அமைப்புகள், அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், ஷெரீப்பை சுட்டுக்கொன்றவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஷெரீப் கொல்லப்பட்டதை கண்டித்து வங்காளதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் இந்து மத இளைஞரை கும்பல் அடித்துக்கொன்று உடலை சாலையில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் மைமன்சிங் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தீபு சந்திர தாஸ் (வயது 30). இந்து மத இளைஞரான இவர் துபெலியா பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

சந்திர தாஸ் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், இஸ்லாமிய மதக்கடவுளை அவமதித்து விட்டதாகவும் கூறி அவரை நேற்று இரவு 500க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அடித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.

பின்னர் அவரது உடலை சாலையோரம் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். பின்னர், சந்திர தாசின் உடலை நடு ரோட்டில் வீசி உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வங்காளதேசத்தில் சிறுபானமையினராக உள்ள இந்து மதத்தினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்