அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
அபுதாபி,
ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த யாத்திரையில் 2 வகையான வண்ணங்களில் 6 சக்கரங்கள் கொண்ட மரத்திலான ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள் வைக்கப்பட்டது. மற்றொரு ரதத்தில் ஸ்ரீ அக்ஷர்-புருஷோத்தம் மஹராஜ் சிலைகளும் வைக்கப்பட்டன.
ரத யாத்திரைக்கு முன்னதாக அங்கு பக்தர்கள் முன்னிலையில் அமர வைக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பஜனைகள் இசை நிகழ்ச்சிகளுடன் ஆராதனை செய்யப்பட்டு திரளான பக்தர்கள் ரதத்தை இழுத்து கோவிலை சுற்றி வந்தனர். முன்னதாக ரதம் செல்லும் பாதையை பெண் பக்தர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்தபடி சென்றனர்.
ரதம் செல்லும் ரத்ன வீதியை தங்க துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கி சுத்தம் செய்வதாக வரலாறு உள்ளது. கைகளில் கொடிகளும், அலங்கார பதாகைகளையும் ஏந்தி கோவிலை சுற்றி ரத யாத்திரையில் பக்தர்கள் வலம் வந்த காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பலர் தாங்கள் இந்தியாவில் இருப்பதை போன்று உணர்ந்ததாக தெரிவித்தனர்.