அமெரிக்காவில் அதிர்ச்சி: 2 மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்
அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர்.;
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் ஹில்ஸ்பாரோ நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பிரியதர்ஷினி நடராஜன் (வயது 35). இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில் வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய கணவர் நடராஜனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் வந்து, விசாரித்து இருக்கின்றனர். மகன்களை, மனைவி ஏதோ செய்து விட்டார் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், 2 பேரும் உயிரிழந்து விட்டனர் என டாக்டர்கள் கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சட்டவிரோத வகையில் ஆயுதங்களை பதுக்கி வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.