நேபாளத்தில் இடைக்கால அரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி
ஜென் இசட் போராட்ட குழுவினர் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க 3 பேரின் பெயரை முன்மொழிந்தனர்.;
காத்மாண்டு,
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால அரசு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளம் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக அதிபர் மற்றும் ராணுவ தலைமை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஜென் இசட் போராட்ட குழுவினர் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சுசீலா கார்சி, காத்மாண்டு மேயர் பாலேந்திரஷா, மற்றும் நேபாள மின்சார வாரிய முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகிய 3 பேர் பெயரை முன்மொழிந்தனர்.
ஆனாலும் 3 பேரில் யாரை தலைவராக நியமிப்பது என்பதில் போராட்ட குழுவினர் மத்தியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் குல்மன் கிசிங்குக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். சிலர் சுசீலா காகியை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் தெரிவித்து உள்ளனர்.
இந்த திடீர் முட்டுக்கட்டையால் இடைக்கால அரசு தலைவர் தேர்வில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றுக்குள் இதற்கு தீர்வு காணப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் புதிய தலைவர் பொறுப்பேற்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.