நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்கா தாக்குதல்.. ‘பயங்கரவாதிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ - டிரம்ப் பதிவு
அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.;
அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. நைஜீரியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இஸ்லாமியர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நைஜீயாவில் கிறிஸ்தவர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ், அமெரிக்கா சமீபத்தில் நைஜீரியாவை 'குறிப்பிட்ட கவனத்திற்குரிய நாடு' என்று அறிவித்தது. மேலும், நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பென்டகனுக்கு உத்தரவிட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று இரவு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாக டொன்லாடு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்தவர்களை குறிவைத்து கொடூரமாக கொலை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் எனது உத்தரவின்பேரில் சக்திவாய்ந்த, கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.
கிறிஸ்தவர்களை கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் தனது அபாரமான திறமையால் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
எனது தலைமையின் கீழ் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்க ராணுவத்தை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உயிரிழந்த பயங்கரவாதிகள் உள்பட, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், பயங்கரவாதிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.