சரியான நேரத்தில், பெருந்தன்மையான ஆதரவு அளித்தனர்... இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் குடியரசு தின வாழ்த்து

பொருளாதார மீட்சி, எரிசக்தி மற்றும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சியில் இலங்கையுடன் இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படுகிறது என இலங்கை பிரதமர் தெரிவித்து உள்ளார்.;

Update:2026-01-26 16:53 IST

கொழும்பு,

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. விமான சாகசங்கள், ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் என குடியரசு தின கொண்டாட்டம் களை கட்டியது.

போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட செய்தியில், இந்தியாவுடனான நெருங்கிய மற்றும் பன்முக தன்மையுடனான நட்புறவை இலங்கை பெரிதும் மதிக்கின்றது.

பொருளாதார மீட்சி, இணைப்பு, எரிசக்தி, ஆரோக்கியம் மற்றும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சி போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டு நட்புறவு வலுப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, இக்கட்டான தருணங்களில் இருந்து இலங்கை மீள்வதற்கும் மற்றும் எங்களுடைய கடினம் வாய்ந்த சூழ்நிலைகளில், சீர்திருத்த முயற்சிகளில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதற்காகவும், சரியான நேரத்தில், தொடர்ந்து, பெருந்தன்மையுடன் ஆதரவு அளித்து வருவதற்காகவும், இந்தியாவுக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனிற்காக உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்