போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி; ஈரான் தலைவர் வெளிப்படையாக ஒப்புதல்
ஈரானிய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை பற்றி காமேனி எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.;
தெஹ்ரான்,
ஈரானில் வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மக்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டில் அதிகரித்த பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக, ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.
வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்தது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட்டன. அரசை எதிர்த்து போராடியவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்தது.
எனினும், ஈரானில் நிலைமை சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பதற்றம் தணிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமேனி கூறும்போது, அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என ஒப்பு கொண்டார்.
அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, டிசம்பர் இறுதியில், பொருளாதார தேக்கநிலையால் ஏற்பட்ட அமைதியற்ற நிலை மற்றும் அரசியல் துயரங்கள் ஆகியவை, ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைய வழிவகுத்து விட்டது என்றார்.
இதனை மனித தன்மையற்ற செயல் என அவர் கூறியபோதும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்றும் கூறி ஈரானிய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை பற்றி எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.
போராட்டக்காரர்களை டிரம்ப் ஊக்குவிக்கிறார் என்றும் அதனை விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் வந்த அவர்தான் குற்றவாளி என்றும் காமேனி கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்களை அந்நிய சக்திகள் ஊக்குவித்தன. அதுபோன்ற குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். ஈரானின் உச்சபட்ச தலைவராக இருக்கும் காமேனி இதுபோன்ற விசயங்களை வெளிப்படையாக பேசியது இல்லை. எனினும், சர்வதேச அளவில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் ஈரானில் மக்கள் போராட்டங்கள் கடுமையாக இருந்தன.