இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அது மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.;
கொழும்பு,
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தின் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுதவிர டிட்வா புயலும், இலங்கையை கடுமையாக தாக்கியது.
இதனால் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்தது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்தது. இலங்கையில் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்கியது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இந்திய விமான படையின் விமானத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 50 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கனமழை தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் இதில் ரூ.3 ஆயிரம் கோடி கடன் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு பெய்லி பாலங்கள் கட்டி கொடுக்க முடிவானது. இதற்காக 48 இந்திய ராணுவ வீரர்களை கொண்ட பொறியியல் பணிக்குழு இலங்கைக்கு சென்றுள்ளது. மொத்தம் 228 டன் எடையுள்ள 4 பெய்லி பாலங்கள், சி-17 குளோப் மாஸ்டர் என்ற 4 விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
இதன்படி, இலங்கையில் பெய்லி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 120 அடி நீளம் கொண்ட 3-வது பாலம் கட்டுமான பணியை இந்திய ராணுவம் நிறைவு செய்து உள்ளது. மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரா எலியா மாவட்டங்களை மீண்டும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.
இதனால், ஏறக்குறைய டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அது மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தியில், ஜப்னா மற்றும் கண்டி பகுதிகளில் 2 முக்கிய பெய்லி பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், 3-வது பெய்லி பாலமும் பி-492 நெடுஞ்சாலையில் 120 அடி நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இந்த முயற்சியானது, இலங்கை மற்றும் அண்டை நாடுகளுக்கு முதலில், என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறது என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தது.