கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற நேட்டோ அனுமதிக்க வேண்டும்; டிரம்ப்
கிரீன்லாந்தை கைப்பற்ற படைகளை பயன்படுத்தமாட்டேன் என்று டிரம்ப் கூறினார்;
டாவோஸ்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக வர்த்தக மன்றத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் நேற்று டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கிரீன்லாந்துக்கான உரிமையை எங்களுக்கு கொடுக்க வேண்டும். கிரீன்லாந்தை கைப்பற்ற படைகளை பயன்படுத்தமாட்டேன். அதேவேளை, கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதை நேட்டோ அனுமதிக்கவேண்டும். அமெரிக்கா விரிவடைவதை நேட்டோ தடுக்கக்கூடாது. பனிக்கட்டிகள் நிறைந்த மோசமான இடத்தையே நான் கேட்கிறேன். 2ம் உலகப்போரின்போது ஐரோப்பாவை அமெரிக்கா காப்பாற்றியது. மேலும், நேட்டோ அமைப்பை உருவாக்கியது. ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக நிறைய கொடுத்துள்ளது. அதை ஒப்பிடும்போது நான் கேட்பது சிறிய விஷயம்’ என்றார்.