டிரம்ப் உத்தரவால்... டாக்டர்களை தேடி ஓடும் தம்பதிகள்

டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.;

Update:2025-01-24 04:58 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார். அமெரிக்க அரசியலமைப்பின்படி கடந்த 20-ந்தேதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.

இதன்பின்னர் அவர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவற்றில், பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் ஒன்றாகும்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 20-ந்தேதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும். டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்.

இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் டாக்டர்களை தொடர்பு கொண்டு அந்த நாளுக்கு முன்பு குழந்தை பிறக்கும் வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர். பலரும் டாக்டர்களை தொடர்பு கொண்டு முன்பதிவும் செய்து வருகின்றனர்.

பிப்ரவரி 19-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள், இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் ஆவது என்பது இனி முடியாது. இதனால், 8 மாதம் மற்றும் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் டாக்டர்களை தேடி ஓடுகின்றனர். 7 மாத கர்ப்பிணிகள் கூட இதுபோன்று வருகிறார்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இதனால், கிரீன் கார்டு பெறுவதற்காகவும், பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் எச்-1பி மற்றும் எல்1 ஆகிய தற்காலிக விசாக்களுடன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்கா செல்வதற்காக நிறைய விசயங்களை தியாகம் செய்து விட்டு சென்றால், கடைசியில் கதவை சாத்தியது போன்று நிலைமை உள்ளது என பலரும் வேதனை தெரிவித்து உள்ளனர். அமெரிக்கா செல்லும் பலருடைய கனவு, டிரம்ப் உத்தரவால் இனி நனவாவது கடினம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்